ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் 2026-ல் நிறைவுபெறும் - மத்திய அரசு தகவல்

ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் 2026-ம் ஆண்டில் நிறைவுபெறும் என மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-21 15:39 GMT

புதுடெல்லி,

ஆழ்கடலில் இதுவரை கண்டறியப்படாத கனிமங்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்கு மனிதர்களை கடலில் 6,000 மீட்டர் ஆழத்திற்கு அனுப்பும் சமுத்ராயன் திட்டம் 2026-ம் ஆண்டில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை வழங்கி உள்ளார்.

தாதுக்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக 'மத்ஸ்யா 6000' என்ற ஆய்வு வாகனத்தில் 6000 மீட்டர் ஆழத்திற்கு மூன்று ஆய்வாளர்களை அனுப்பும் நோக்கில் சமுத்ராயன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

'மத்ஸ்யா 6000' வாகனத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஓடி) வடிவமைத்து உருவாக்கி உள்ளது. வாகனத்தின் வடிவமைப்பு நிறைவடைந்து, சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆராய்வதற்காக சுரங்க இயந்திரம் மற்றும் ஆளில்லா வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தின் செயல்பாட்டுக் காலம் 2020 -2021 முதல் 2025-2026 வரையாகும். மிக நீண்ட கடற்பரப்பைக் கொண்டிருக்கும் இந்தியா, கடற்கரையோரம் 9 மாநிலங்களையும் 1,382 தீவுகளையும் கொண்டிருக்கிறது. சமுத்ராயன் திட்டம் அமல்படுத்துவதன் மூலம் கடலடி ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கான நீர்மூழ்கி கலத்தைப்பெற்றுள்ள அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்