எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க காங்கிரஸ் தான் காரணம்; சித்தராமையா பேட்டி

எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-25 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி கொடுத்த அழுத்தம்

கர்நாடகத்தில் தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. அந்த சமூகங்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்க தாங்கள் தான் காரணம் என்று கூறி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு பா.ஜனதாவினர் முயற்சிக்கின்றனர். உண்மையில் 2 சமூகங்களுக்கும் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று பல முறை அரசை, காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

சட்டசபை கூட்டத்தொடரில் 3 முறை விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், சட்டசபை கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் கட்சி போராட்டமும் நடத்தி இருந்தது. காங்கிரஸ் கட்சி அரசுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக தற்போது தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அரசியல் ஆதாயம்

நீதிபதி நாகமோகனதாஸ் அரசுக்கு அளிக்கை அளித்து மாதக்கணக்கில் ஆகிவிட்டது. நீதிபதி அறிக்கை அளித்ததும் இடஒதுக்கீட்டை அரசு அதிகரிக்கவில்லை. அத்துடன் வால்மீகி சமுதாயத்தை சேர்ந்த குருபீட மடாதிபதி 150 நாட்களுக்கும் மேல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். இதுபோன்ற காரணங்களால் இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போதும் இடஒதுக்கீடு அவசர சட்டத்தை நிறைவேற்ற அடுத்த கூட்டத்தொடர் வரை காத்திருக்க வேண்டி உள்ளது.

இந்த அவசர சட்டத்தை நிறைவேற்ற 2 நாட்கள் சிறப்பு கூட்டத்தை கூட்ட அரசை வலியுறுத்தி வருகிறோம். சிறப்பு கூட்டத்தை கூட்டினால், இடஒதுக்கீடு அவசர சட்டத்தை நிறைவேற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய மநதிரிகளை சந்தித்து பேசலாம். இடஒதுக்கீடு அதிகரிக்கும் விவகாரத்தில் அரசுக்கு, எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்