விலை உயர்வை கட்டுப்படுத்த குருணை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

உள்நாட்டில் பற்றாக்குறையை தடுக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Update: 2022-09-09 22:27 GMT

புதுடெல்லி:

நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால் 1 கோடி முதல் 1.2 கோடி டன் வரை அரிசி உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உள்நாட்டில் பற்றாக்குறையை தடுக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பாசுமதி அல்லாத அரிசிகளின் (புழுங்கல் அரிசி தவிர) ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில் 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு உள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக உடைந்த அரிசி (குருணை) ஏற்றுமதிக்கு மத்திய அரசு முற்றிலும் தடை விதித்து உள்ளது. இந்த உத்தரவும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இது குறித்து மத்திய உணவு செயலாளர் சுதான்ஷூ பாண்டே கூறுகையில், 'உடைந்த அரிசி ஏற்றுமதியில் முற்றிலும் அசாதாரணமான உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் உடைந்த தானியங்கள் கால்நடைத் தீவனம் மற்றும் எத்தனால் கலப்பு திட்டத்துக்கும் போதுமான அளவில் கிடைக்கவில்லை. எனவே இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது' என்று தெரிவித்தார்.

அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அரிசி வர்த்தகத்தில் 40 சதவீதத்தை இந்தியா கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்