இரட்டை என்ஜின் அரசின் தவறான செயல்பாடுகளால் கர்நாடக அரசின் நிதிநிலை மோசமாக உள்ளது; மந்திரி பிரியங்க் கார்கே பேட்டி

இரட்டை என்ஜின் அரசின் தவறான செயல்பாடுகளால் மாநில அரசின் நிதிநிலை மோசமான நிலையில் உள்ளது என்று கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.

Update: 2023-05-31 21:20 GMT

பெங்களூரு:

கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அனைவருக்கும் கிடைப்பதை...

அரசில் ஒவ்வொரு திட்டமும் விதிமுறைகள், வழிமுறைகள் அடிப்படையில் தான் அமல்படுத்தப்படுகிறது. இது பொது மக்களின் பணம். வரி செலுத்துவோரின் பணம் என்பதால் இதை கவனமாக கையாள வேண்டியது அவசியம். அதனால் அதற்கு நிபந்தனைகள் இருக்க வேண்டியது அவசியம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் எந்த திட்டத்திற்கும் விதிமுறைகள் இல்லை என்பதை சொல்லுங்கள்.

அரசின் திட்ட பயன்கள் தகுதியான அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வோம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது தவறா?. ஏழை மக்களுக்காக தான் அரசே உள்ளது. 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிபந்தனைகள் இன்றோ (நேற்று) அல்லது நாளையோ (இன்று) இறுதி செய்யப்படும். அதனால் யாரும் கவலைப்பட தேவை இல்லை.

கர்நாடகம் கடன் சுமை

இரட்டை என்ஜின் அரசின் தவறான செயல்பாடுகளால் தான் மாநில அரசின் நிதிநிலை மோசமான நிலையில் உள்ளது. கர்நாடகத்திற்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத்தொகை வரவில்லை. கொரோனா நெருக்கடி காலத்தில் நிதி நிர்வாகம் தவறான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தான் இன்று கர்நாடகம் கடன் சுமையில் சிக்கியுள்ளது.

கடந்த காலங்களில் இதுகுறித்து சட்டசபை கூட்டத்தில் நான் பிரச்சனை கிளப்பி பேசினேன். தற்போது எங்கள் அரசு அமைந்துள்ளது. நாங்கள் நிதிநிலையை சீராக்குவோம்.

இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்