காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் திருடிய கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது

காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் திருடிய கேரளாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-25 18:45 GMT

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா அரம்பூரி நகரை அடுத்த அரந்தோடு கிராமத்தை சேர்ந்தவர் ஷம்சுதீன், காங்கிரஸ் பிரமுகர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் தங்க நகை, ரொக்கப்பணத்தை திருடி சென்றனர். இது குறித்து ஷம்சுதீன் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த திருட்டு வழக்கு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரளா மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த பயாஸ், பிரசன்னா என்று தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் மங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 30-க்கும் அதிகமான வழக்குகள் இவர்கள் மீது பதிவாகியுள்ளது. சம்பவத்தன்று இவர்கள் திருடவேண்டுமென்ற நோக்கில் செல்லவில்லை.

காசர்கோட்டில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக சென்றனர். அப்போது வழியில் ஷம்சுதீன் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டின் வாசல் படியில் ஒரு நாளிதழ் கிடந்தது. இதையடுத்து வீட்டில் யாரும் இல்லை என்று உறுதி செய்த, அவர்கள் நகை, பணத்தை திருடிவிட்டு சென்றது தெரியவந்தது. இந்த நகை, பணத்தை வைத்து தங்களை ஜாமீனில் எடுத்த வக்கீலுக்கு கட்டணம் வழங்கியதும் தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்