டிரைவர் தற்கொலைக்கு போலீஸ்தான் காரணம்- மனைவி, உறவினர்கள் போராட்டம்

விசாரணைக்காக போலீஸ் நிலையம் சென்று வந்த டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு போலீசார் தான் காரணம் எனக்கூறி அவருடைய மனைவி குற்றச்சாட்டு கூறி உள்ளார்.

Update: 2023-06-17 18:45 GMT

சிவமொக்கா:-

டிரைவர்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஹொலேஹொன்னூர் அருகே உள்ள கன்னேகொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத்(வயது 35). இவருக்கு திருமணமாகி கமலாட்சி என்ற மனைவி உள்ளார். தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். டிரைவரான மஞ்சுநாத், சில நேரங்களில் கூலித்தொழிலும் செய்து வந்தார். மதுகுடிக்கும் பழக்கம் உடைய மஞ்சுநாத், குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பொதுமக்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 11-ந் தேதி அன்றும், மஞ்சுநாத் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அக்கம்பக்கத்தினரிடம் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து அவர்கள் '112' என்ற போலீஸ் உதவி மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு மஞ்சுநாத் தகராறு செய்வது பற்றி புகார் செய்தனர்.

தற்கொலை

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மஞ்சுநாத்தை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது போலீஸ் நிலையத்தில் வைத்து மஞ்சுநாத்தை, போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதையடுத்து மஞ்சுநாத்தின் தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் போலீஸ் நிலையத்திற்கு சென்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

போலீசார் தாக்கியதால் மிகவும் மனமுடைந்து காணப்பட்ட மஞ்சுநாத், அவமானத்தால் வீட்டில் இருந்து வெளியே செல்லாமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு தூங்கச்சென்ற மஞ்சுநாத், மனவேதனையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதைப்பார்த்த அவரது மனைவி கமலாட்சி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

கதறி அழுத அவர்கள் இதுபற்றி உறவினர்களுக்கும், கிராம மக்களுக்கும் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் ஒன்று திரண்டு ஹொலேஹொன்னூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் பூமாரெட்டி விரைந்து வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது மஞ்சுநாத்தின் மனைவி கமலாட்சி, தனது கணவரின் சாவுக்கு போலீசார் தான் காரணம் என்றும், அவரை போலீசார் கடுமையாக தாக்கி இருப்பதாலும், தற்கொலைக்கு தூண்டும் வகையில் திட்டி மனவேதனையை ஏற்படுத்தி இருப்பதாலும் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி குற்றம் சாட்டினார்.

தவறு செய்தவர்கள்...

அதையடுத்து கமலாட்சியையும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் சமாதானம் செய்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் பூமாரெட்டி, இதுபற்றி உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட மஞ்சுநாத்தின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே ஹொலேஹொன்னூர் போலீசார் மஞ்சுநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன்பேரில் மஞ்சுநாத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இதற்கிடையே போலீசார் மீது புகார் கூறி மஞ்சுநாத்தின் மனைவி கமலாட்சி, ஹொலேஹொன்னூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்