‘இந்தியா-ரஷியா உறவு மிகவும் நிலையானது’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
உலகின் அனைத்து பெரிய நாடுகளுடனும் இந்தியாவிற்கு நல்ல உறவு உள்ளது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
ரஷிய அதிபர் புதின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். டெல்லியில் நடைபெற்ற 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கலந்து கொண்டனர். மேலும் இந்தியா-ரஷியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொடர்ந்து, 2 நாட்கள் அரசு பயணத்தை நிறைவு செய்த அதிபர் புதின் நேற்று இரவு ரஷியா புறப்பட்டு சென்றார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று அதிபர் புதினை வழி அனுப்பி வைத்தார். சமீப காலமாக இந்தியா-அமெரிக்கா உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள சூழலில், புதினின் இந்திய வருகை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா மற்றும் ரஷியா இடையிலான உறவு மிகப்பெரியது மற்றும் நிலையானது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “புதினின் வருகையால் இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் சிக்கல் ஏற்படும் என்ற கருத்தை நான் ஏற்கமாட்டேன். உலகின் அனைத்து பெரிய நாடுகளுடனும் இந்தியாவிற்கு நல்ல உறவு உள்ளது.
இந்தியா-ரஷியா இடையிலான உறவு கடந்த 70-80 ஆண்டுகளில் மிகப்பெரியதாகவும், மிகவும் நிலையானதாகவும் இருந்து வருகிறது. புதினின் வருகை, இந்தியா-ரஷியா இடையே பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது பற்றியது. எந்தவொரு நாடும், மற்றவர்களுடனான நமது உறவுகளை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை கூறுவது நியாயமானது இல்லை என நான் கருதுகிறேன்.
அமெரிக்க அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் வர்த்தகம்தான் முக்கிய கவனம் பெறுகிறது. நியாயமான நிபந்தனைகளின் கீழ் அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதை வழிநடத்துவதில் இந்தியாவின் அணுகுமுறை முற்றிலும் தேசிய நலன்களால் இயக்கப்படுகிறது. அதாவது, ராஜதந்திரம் என்பது வேறொருவரை மகிழ்விப்பது என்று நான் நினைக்கவில்லை. என்னை பொறுத்தவரை அது நமது தேசிய நலன்களை பாதுகாப்பது பற்றியது.
நமது தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நலன்கள் நமக்கு முக்கியம். அமெரிக்கா போன்ற ஒரு நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தத்தை கையாளும்போது, நமது நிலைப்பாடு மிகவும் விவேகத்துடன் கூடியதாக இருக்க வேண்டும். இந்தியா போன்ற ஒரு பெரிய மற்றும் வளர்ந்து வரும் நாடு, உலகின் முக்கிய வளர்ந்த அரசுகளுடன் ஒத்துழைப்பைப் பேணுவது மிகவும் அவசியம்.
சீனா, அமெரிக்கா அல்லது ஐரோப்பா உடனான ரஷ்யாவின் உறவு கூட அதன் ஏற்ற தாழ்வுகளைக் கொண்டுள்ளது. இந்த நாடுகளில் பலவற்றுடனான நமது உறவுகளும் அவ்வாறே உள்ளன. நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் சில அம்சங்கள் வளர்ச்சியடைவதும், சில அம்சங்கள் நீடிக்காமல் போவதும் இயற்கையானது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.