உயிரைப் பறித்த ரீல்ஸ் ஆர்வம்... தலைகீழாக தொங்கியபோது கொடிக்கம்பம் சரிந்து வாலிபர் உயிரிழப்பு

சிவம் குமார் இதற்கு முன்பு விதவிதமான ஸ்டண்டுகளை செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.

Update: 2024-04-19 12:11 GMT

லக்னோ:

இணையத்தை அதிகம் பயன்படுத்தும் இன்றைய தலைமுறையினர், சமூக வலைத்தளங்களில் லைக்குகளை பெறுவதற்காக விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வெளியிடுகின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவிடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அதீத ஆர்வம் காரணமாக சிலர் உயிரைப் பணயம் வைத்து விதவிதமான ஸ்டண்டுகளை செய்து வீடியோ எடுக்கின்றனர். திறமையை காட்டுவதாக கூறி செய்யும் இத்தகைய ஸ்டண்டுகள் சில சமயம் மரணத்தில் முடிகின்றன.

அவ்வகையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சிவம் குமார் (வயது 21) என்ற வாலிபர், பள்ளியின் மொட்டை மாடியில் உள்ள கொடிக்கம்பத்தில் தலைகீழாக தொங்கி ரீல்ஸ் எடுத்தபோது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பண்டா மாவட்டம், கைராடா கிராமத்தில் உள்ள ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் நேற்று மாலை இச்சம்பவம் நடந்துள்ளது. சிவம் மற்றும் அவரது நண்பர்கள் அனு மற்றும் அங்கித் ஆகியோர் பள்ளிக்கு சென்று பள்ளியின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். பின்னர் சிவம் மட்டும் அங்குள்ள கொடிக் கம்பதில் ஏற, அதனை நண்பர்கள் வீடியோ எடுத்தனர். ஆனால் வீடியோவை பதிவு செய்யத் தொடங்கிய சிறிது நேரத்தில், பாரம் தாங்காமல் கொடிக் கம்பம் சரிந்து விழுந்தது. கம்பத்துடன் சேர்ந்து விழுந்த சிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவர் கொடிக்கம்பத்தில் தலைகீழாக தொங்கியபோது, கொடியை உயர்த்த விரும்பினார். ஆனால், சிமெண்ட் கான்கிரீட் போடப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த கம்பம் அவரது எடையை தாங்க முடியாமல் சரிந்து விழுந்ததால் அவர் இறந்துள்ளார்.

இதேபோல் அவர் பலமுறை விதவிதமான ஸ்டண்டுகளை செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார். குறிப்பாக, மரங்கள் மற்றும் கூரைகளில் இருந்து தலைகீழாக தொங்குவது போன்று வீடியோக்களே அதிகம் உள்ளன. இந்த ஸ்டண்ட் முயற்சியே கடைசியில் அவரது உயிரை பறித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்