வில் அம்பு சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் -உத்தவ் தாக்கரே கோபம்
வில் அம்பு சின்னம் திருடப்பட்டிருக்கிறது. சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது என உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.
மும்பை
மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, முதல்-மந்திரி பதவி வகித்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்கினார். இதனால் சிவசேனா கட்சி 2 ஆக உடைந்தது.
சிவசேனா கட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயை ஆதரித்தனர். இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தாங்கள் தான் உண்மையான சிவசேனா என இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
உத்தவ் தாக்கரே தரப்பு நாங்கள் தான் உண்மையான சிவசேனா என வாதிட்டது.
இந்தநிலையில் நேற்று ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.
தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சி பெயரையும், அந்த கட்சியின் 'வில்-அம்பு' சின்னத்தையும் வழங்கியது.
ஏக்நாத் ஷிண்டேவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதை அடிப்படையாக வைத்து அவர்கள் தான் உண்மையான சிவசேனா என அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்து உள்ள உத்தரவில், "2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பெற்ற வாக்குகளில் 76 சதவீதம் ஓட்டுகளை ஏக்நாத்ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பெற்று உள்ளனர்.
உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 23.5 சதவீதம் ஓட்டுகள் பெற்று உள்ளனர்" என கூறியுள்ளது. இதற்கிடையே மராட்டியத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 26-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த இடைத்தேர்தல் வரை உத்தவ் தாக்கரே அணி தீப்பந்தம் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. உத்தவ் தாக்கரேக்கு பின்னடைவு கட்சியின் பெயர், சின்னம் முதல்-மந்திரி ஷிண்டே அணிக்கு சென்று இருப்பது உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
சிவசேனையின் வில் அம்பு சின்னம் திருடப்பட்டு விட்டதாகவும், சின்னத்தைத் திருடியவர்களுக்கு சரியான பாடம் கற்றுத் தர வேண்டும் எனவும் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்களுடனான கூட்டத்துக்கு முன்னதாக மும்பையில் தனது இல்லம் முன்பு திரண்டிருந்த சிவசேனை ஆதரவாளர்களிடையே பேசும் போது அவர் இதனை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:-
வில் அம்பு சின்னம் திருடப்பட்டிருக்கிறது. சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. திருடன் பிடிபட்டுவிட்டான். நான் அந்தத் திருடனுக்கு சவால் விடுகிறேன். அந்தத் திருடன் வில் அம்புடன் களத்துக்கு வரும் போது தீப்பந்தத்தினால் பதிலடி கொடுப்போம். சிவசேனை ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு கட்சியின் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என கூறினார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு தீப்பந்தம் சின்னத்தை கடந்த ஆண்டு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த சின்னமே புனேவின் கஸ்பா பெத் மற்றும் சின்ச்வாத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வரை நீடிக்கும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த இரு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.