குருடுமலையில் பிரசார பயணத்தை தொடங்குகிறார், எடியூரப்பா

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வருகிற 17-ந் தேதி குருடுமலையில் வைத்து தனது பிரசார பயணத்தை எடியூரப்பா தொடங்க உள்ளதாக பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-09-09 18:45 GMT

கோலார் தங்கவயல்

நாடாளுமன்ற தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் பலத்துடன் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா 66 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் தோல்விக்கு முக்கிய காரணம் அக்கட்சி தலைவர்கள் எடியூரப்பாவை ஒதுக்கி வைத்தது தான் என்று கருதினர்.

இதையடுத்து அடுத்த ஆண்டு(2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் பெருவாரியான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜனதா கணக்கு போட்டுள்ளது. அதற்காக எடியூரப்பாவை முதன்மை தலைவராக களமிறக்க பா.ஜனதாவினர் முடிவு செய்துள்ளனர்.

எடியூரப்பா

பா.ஜனதா தலைவர்களின் அழைப்பை எடியூரப்பாவும் ஏற்று நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்போதே தீவிர பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அதன் ஒருபடியாக வருகிற 17-ந் தேதி கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா குருடுமலையில் இருந்து எடியூரப்பா தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

குருடுமலை கர்நாடக மாநிலத்தில் ஈசானிய மூலையில் அமைந்திருப்பதாகவும், அதனால் எடியூரப்பா அங்கிருந்து நாடாளுமன்ற தேர்தல் பிரசார பயணத்தை தொடங்குவதாகவும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா கட்சியின் கோலார் மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள். மேலும் இதில் கோலார் மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களைச் சேர்ந்த பா.ஜனதா தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று எடியூரப்பா அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்