கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க கோரி மாணவர்களின் பெற்றோர்கள்தர்ணா

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க கோரி குடகு மாவட்டம் சோமவார்பேட்டையில் மாணவர்களின் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-09 17:35 GMT

குடகு:

தர்ணா போராட்டம்

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் கன்னட வழிக்கல்வி மட்டுமே மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதன்படி நேற்று காலையில் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா கொட்லிபேட்டே அரசு பள்ளி முன்பு பெற்றோர்கள் பலர் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை தொடங்கவேண்டும், மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் பேசும் திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பினர். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வலியுறுத்தினர்.

மந்திரியிடம் மனு

இந்த சந்தர்ப்பத்தில் குடகு மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில பள்ளி கல்வித்துறை மந்திரியுமான பி.சி.நாகேஸ் அப்பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்தார். அப்போது அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பார்த்தவுடன் காரை நிறுத்தி கீழே இறங்கி அவர்களிடம் விசாரித்தார். அப்போது அவர்கள், அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியில் பாடங்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனுவும் கொடுத்தனர்.

அந்த மனுவை பெற்றுக்கொண்ட மந்திரி பி.சி.நாகேஸ் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சந்தர்ப்பத்தில் மந்திரி நாகேசுடன் மாவட்ட கலெக்டர் மற்றும், அப்பச்சு ரஞ்சன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்