புனேயில் வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்

புனேயில் வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-01 18:45 GMT

புனே, 

இந்திய விமானப்படைக்கு சொந்தமான 'சேட்டக்' ஹெலிகாப்டர் நேற்று புனேயில் இருந்து புறப்பட்டது. ஹெலிகாப்டர் பாராமதி பகுதியில் பறந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அது உடனடியாக பாராமதி, கண்டஜ் கிராமத்தில் காலை 10.30 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

எங்களுக்கு கிடைத்த தகவல்படி 2 ஹெலிகாப்டர்கள் புனேயில் இருந்து புறப்பட்டுள்ளன. அதில் ஒன்று அவசரமாக கண்டஜ் கிராமத்தில் அனுமந்த் அதோலே என்ற விவசாயியின் நிலத்தில் தரையிறக்கப்பட்டது. தற்போது வயலில் எதுவும் பயிரிடப்படவில்லை. ஹெலிகாப்டரில் 4 பேர் இருந்தனர். தகவல் அறிந்தவுடன் போலீசார் ஆயுதங்களுடன் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு அது மதியம் 1 மணியளவில் புறப்பட்டு சென்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

விமானப்படை ஹெலிகாப்டர் வயலில் தரையிறங்கிய சம்பவத்தால் நேற்று புனேயில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags:    

மேலும் செய்திகள்