தேசியவாத காங்கிரசை விட்டு சிலர் வெளியேற அமலாக்கத்துறையே காரணம்; சரத்பவார் தாக்கு

அமலாக்கத்துறை விசாரணையே சிலர் தேசியவாத காங்கிரசை விட்டு வெளியேற காரணம் என சரத்பவார் கூறியுள்ளார்.

Update: 2023-08-21 20:00 GMT

மும்பை, 

அமலாக்கத்துறை விசாரணையே சிலர் தேசியவாத காங்கிரசை விட்டு வெளியேற காரணம் என சரத்பவார் கூறியுள்ளார்.

கட்சியில் பிளவு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித்பவார் சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைந்தார். இதைத்தொடர்ந்து அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். ஆனால் சரத்பவார் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்தது. இந்தநிலையில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறுகையில், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைந்ததாக தெரிவித்தார். இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் சமூக ஊடக கூட்டத்தில் சரத்பவார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அமலாக்கத்துறை விசாரணை

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. நமது உறுப்பினர்கள் சிலர் நம்மை விட்டு வெளியேறினர். அவர்கள் (அஜித்பவார் அணி) வளர்ச்சிக்காக பா.ஜனதா கூட்டணியில் இணைந்ததாக கூறுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. அவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இதன் காரணமாகவே அவர்கள் தேசியவாத காங்கிரசை விட்டு வெளியேறினர். அஜித்பவார் அணியை சேர்ந்த சில உறுப்பினர்கள் பா.ஜனதாவில் சேருமாறு வலியுறுத்தப்பட்டனர். இல்லையெனில் அவர்கள் வேறு இடத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பார்கள்.

14 மாத சிறை

இருப்பினும் சில உறுப்பினர்கள் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருந்தனர். முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் 14 மாதங்கள் சிறையில் இருந்தார். தேஷ்முக்கிடம் கூட தனது அணியை மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். தேசியவாத காங்கிரசை விட்டு அவர் வெளியேறவில்லை. மராட்டியத்தில் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். வேலையின்மை போன்ற பிரச்சினைகளை மாநிலம் எதிர்கொள்கிறது. விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்