சர்வதேச அளவில் டாட்டா மோட்டார்ஸ் விற்பனை 15% சரிந்தது

சர்வதேச அளவில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 15 சதவீதம் சரிவடைந்துள்ளது.

Update: 2019-12-12 09:30 GMT
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த நவம்பர் மாதத்தில், உலக அளவில் (ஜகுவார்-லேண்டு ரோவர் சொகுசு கார்கள் உள்பட) மொத்தம் 89,671 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 15 சதவீத சரிவாகும். அப்போது அது 1,04,964 வாகனங்களாக இருந்தது.

இதில் டாட்டா பயணிகள் வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் சரிந்து (66,429-ல் இருந்து) 58,641-ஆக குறைந்து இருக்கிறது. வர்த்தக வாகனங்கள் விற்பனை (டாட்டா தேவூ வாகனங்கள் உள்பட) 19 சதவீதம் குறைந்து (38,535-ல் இருந்து) 31,030-ஆக சரிவடைந்துள்ளது.

டாட்டா நிறுவனம் மொத்தம் 46,542 ஜகுவார்-லேண்டு ரோவர் கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 3.4 சதவீதம் குறைவாகும். இதில் ஜகுவார் கார்கள் விற்பனை 11,464-ஆக உள்ளது. லேண்டு ரோவர் கார்கள் விற்பனை 35,078-ஆக இருக்கிறது.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.216 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாக கண்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,048 கோடியாக இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது டாட்டா மோட்டார்ஸ் பங்கு ரூ.160.80-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.162.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ.157.45-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.161.75-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.32 சதவீதம் உயர்வாகும்.

மேலும் செய்திகள்