சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல்... காஷ்மீரில் வெல்லப்போவது யார்?

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம் மூலம் இந்த சட்டம் நீக்கப்பட்டது.

Update: 2024-04-16 02:01 GMT

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல்... காஷ்மீரில் வெல்லப்போவது யார்?இந்தியாவின் வட முனையில் இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமாக அமைந்துள்ளது காஷ்மீர். இமயமலைக்கும், பிர் மலைத்தொடருக்கும் இடையே அமைந்துள்ள பள்ளத்தாக்கு பகுதிதான் காஷ்மீர்.

ஜம்மு-காஷ்மீரில் 2019-ம் ஆண்டு வரை பாரமுல்லா, ஸ்ரீநகர், அனந்தநாக்-ராஜவுரி, உதம்பூர், ஜம்மு மற்றும் லடாக் ஆகிய 6 தொகுதிகள் இருந்தன.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 3 தொகுதிகளிலும், தேசிய மாநாடு கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தன.தற்போது லடாக் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதால், இப்போது ஜம்மு-காஷ்மீரில் 5 நாடாளுமன்ற தொகுதிகளே உள்ளன. இந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த 5 தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.அதே நேரம் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபை கடந்த 2018-ம் ஆண்டு கலைக்கப்பட்டது. அப்போது முதல்-மந்திரியாக இருந்தவர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முக்தி.நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏனோ சட்டமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.தற்போதைய தேர்தல் களம் பற்றி பார்க்கும் முன் காஷ்மீரின் அரசியல் வரலாற்றை சற்று பார்க்கலாம்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம் மூலம் இந்த சட்டம் நீக்கப்பட்டது. அதேபோல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் ஓர் யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஓர் யூனியன் பிரதேசமாகவும் மாறியது.

1947-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது அந்த மாநில பிரதமராக பொறுப்பில் இருந்தவர் ஷேக் அப்துல்லா. பின்னர் 1953-ம் ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவர், கைது செய்யப்பட்டு, மாநிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். தமிழகத்தின் கொடைக்கானலில் உள்ள விருந்தினர் மாளிகையில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

1965-ம் ஆண்டு பிரதமருக்கு மாற்றாக முதல்-மந்திரி பதவி கொண்டு வரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. அதன் பிறகு 1974-ம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி மீண்டும் காஷ்மீர் முதல்-மந்திரியாக ஷேக் அப்துல்லா பொறுப்பேற்றார். 1982-ம் ஆண்டு அவர் மரணம் அடையும் வரை தொடர்ந்து முதல்-மந்திரியாக இருந்தார்.

காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா, காஷ்மீர் மாநிலத்தில் அதிகமுறை முதல்-மந்திரியாக இருந்தவர். தேசிய மாநாடு கட்சியை அவர்தான் தொடங்கினார். அவருடைய மகன்தான் பரூக் அப்துல்லா. அவரும் காஷ்மீர் மாநிலத்தில் 3 முறை முதல்-மந்திரியாக இருந்தார். பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லாவும் காஷ்மீரின் முதல்-மந்திரியாக இருந்தார். தற்போது பாரமுல்லா நாடாளுமன்ற தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.

காஷ்மீர் வரலாற்றில் காங்கிரஸ் கட்சிக்கும் தனி இடம் உள்ளது. 4 முறை ஆட்சியில் இருந்தது. குலாம் முகமது சாதிக்தான், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோது முதல்-மந்திரியாக இருந்தார். காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்த குலாம் நபி ஆசாத்தும் முதல்-மந்திரியாக இருந்தார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகி, மத்திய மந்திரியாகவும் ஆனார்.கட்சித்தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சியை தொடங்கியுள்ளார்.

ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த முக்தி முகமது சயீத், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மக்கள் ஜனநாயக கட்சி என்ற கட்சியை தொடங்கினார். அவரும் 2 முறை முதல்-மந்திரியாக இருந்தார்.அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவருடைய மகளான மெகபூபா முக்தி முதல்-மந்திரியானார். அவரது ஆட்சிதான் கடந்த 2018-ம் ஆண்டு கலைக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் நாடாளுமன்ற தேர்தலில் தடம் பதித்த பா.ஜனதா, மாநிலத்திலும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முயற்சியில் வருகிறது.காஷ்மீர் மக்கள் மாநில கட்சிகளான தேசிய மாநாடு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றையே மாற்றி மாற்றி தேர்வு செய்துள்ளனர். இனி அதில் மாற்றம் வரும் என்று பா.ஜனதா நம்புகிறது.இனி தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்

காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் எதிர் எதிர் துருவங்கள். ஆனால் இந்த இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றன.தொகுதி பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டதால் மக்கள் ஜனநாயக கட்சி, 3 தொகுதிகளில் போட்டியிடும் என்று மெகபூபா முக்தி தன்னிச்சையாக அறிவித்தார். அதே நேரம் 5 தொகுதிகளில் 2 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது தேசிய மாநாடு கட்சி. இதன் மூலம் இந்தியா கூட்டணி கட்சிளே மோதிக்கொள்ளும் நிலை காஷ்மீரில் ஏற்பட்டுள்ளது.அதே நேரம் பா.ஜனதா இந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களம் காண்கிறது. அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கம் தங்களுக்கு கைகொடுக்கும் என்று பா.ஜனதாவினர் நம்புகிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி மோடி என்ற பிம்பம் வெற்றியைத் தேடித்தரும் என்றும் கூறுகிறார்கள்.

களத்தில் பெரிய தலைகள் மோதுகின்றன.இந்தியாவின் தலையாக இருக்கும் காஷ்மீர் மாநிலத்தை கைப்பற்றப்போகும் 'தல' யார் என்பது ஜூன் 4-ந்தேதி தெரியும்.

Tags:    

மேலும் செய்திகள்