மன்னிக்கும் மாண்பு மகத்தானது

மன்னிப்பது என்றால் தவறு செய்தவரை தண்டிக்காமல், அவரின் தவறை பெருந்தன்மையுடன் மன்னித்து விடுவதாகும். மன்னிக்கும் மனப்பான்மை இறைவனின் மகத்தான பண்புகளில் ஒரு பரந்த தன்மை ஆகும்.

Update: 2022-07-26 11:57 GMT

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் சிறந்த குணமாகவும், நல்லோர்களின் சிறந்த பண்பாடாகவும், இறை நம்பிக்கையாளர்களின் உயர்ந்த செயல்பாடாகவும் மன்னிக்கும் மனப்பான்மை அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்களின் மன்னிக்கும் மனப்பான்மை குறித்த தகவல்களை காண்போம்.

'உஹதுப்போர் தினத்தில் நபி (ஸல்) அவர்களின் கீழ்ப்பல் உடைக்கப்பட்டது. மேலும், அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. மேலும், அவர்களின் தலைக்கவசம் அவர்களின் தலையின் மீதே வைத்து நொறுக்கப்பட்டது'. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி).

இவ்வாறு, போர்க்களத்தில் தாங்கமுடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டபோதும் கூட நபி (ஸல்) அவர்கள் யாரையும் பழிவாங்கவில்லை. அனைவரையும் மன்னித்த மாமனிதர்தான் அவர். தம்மை விஷம் கொடுத்து, கொல்ல சதி செய்த யூதப்பெண்ணை கூட மன்னித்த மாண்பாளர்தான் அவர்.

இஸ்லாத்தின் முதல் போர் `பத்ர் போர்' ஆகும். அந்தப் போரில் நபியின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களை வஹ்ஷீ என்பவர் கொலை செய்தார். இவரையும் நபி (ஸல்) பழிவாங்காமல் நிபந்தனையின்றி மன்னித்து விட்டார்கள்.

கி.பி. 630 ஜனவரி 10-ம் நாள் அன்று ஹிஜ்ரி 8 ரமலான் பிறை 20-ம் நாளில் நபியவர்களால் மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் மக்கா குறைஷிகளை நோக்கி "நான் உங்கள் விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்வேன் என நீங்கள் கருதுகிறீர்கள்? " எனக் கேட்ட போது, அவர்கள் 'நீங்கள் நல்லவர்; சங்கையானவர். மேலும் சங்கையானவரின் மகன் ஆவீர். எங்களிடம் நல்லவிதமாக நடப்பீர்கள்' என்று பதில் கூறினார்கள்.

உடனே, நபி (ஸல்) அவர்கள் 'இன்று பொதுமன்னிப்பு வழங்கப்படும் நாள். பழிவாங்கப்படும் நாள் அல்ல. உங்களுக்கு பொதுவிடுதலை அளிக்கப்படுகிறது' என்று கூறினார்கள்.

தம்மையும், தமது தோழர்களையும் சொந்த தாய்நாட்டை விட்டு அகதிகளாக துரத்தியடித்த மக்கா குறைஷிகளை தண்டிக்க சகலவிதமான வாய்ப்பும், ஆட்சியும், அதிகாரமும் இருந்தும் கூட பொதுமன்னிப்பு வழங்கிய மாமனிதர் தான் முகம்மது நபி (ஸல்) அவர்கள்.

இறைவனையும், இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்களையும் பின்பற்றக்கூடிய முஸ்லிம்கள் மன்னிக்கும் மனப்பான்மையுடன் "மறப்போம் மன்னிப்போம்" என்று நடந்து கொள்ள வேண்டும்.

பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால், அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும், இறைவனின் பாதையில் செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கிக்கொள்வார்கள்; மனிதர்கள் செய்யும் பிழைகளை மன்னிப்போராய் இருப்பார்கள்; இவ்வாறு அழகாக நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (திருக்குர்ஆன் 3:134)

ஹூஸைன் (ரலி) அவர்களின் பேரன் ஜைனுல் ஆபிதீன். ஒருநாள் அவரின் பணிப்பெண் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு எஜமானரிடம் வரும் போது, கைத்தவறி கிண்ணம் கீழே விழுந்து, எஜமானரின் முகத்தை காயப்படுத்தியது.

உடனே சுதாரித்துக் கொண்ட பணிப்பெண் "பயபக்தியாளர்கள் கோபத்தை அடக்குவார்கள்" எனும் இறைவசனத்தை ஓதியபோது, உடனே எஜமானர் "நான் என் கோபத்தை அடக்கிவிட்டேன்" என்பார். "மேலும், அவர்கள் பிறரின் பிழையை மன்னிப்பார்கள்" என்று அடுத்த வரியை உச்சரித்தபோது "நான் உன்னை மன்னித்து விட்டேன்" என்பார் எஜமானர். "இவ்வாறு நன்மை செய்வோரை இறைவன் நேசிக்கின்றான்" என்ற வரியை கூறியபோது, "நீ இன்று விடுதலை" என்று கூறுவார்.

"தர்மம் செல்வத்தைக் குறைக்காது. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு இறைவன் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். இறைவனுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை இறைவன் உயர்த்தாமல் இருப்பதில்லை என நபி (ஸல்) கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

"காரியங்களில் இறைவனுக்கு மிகவும் பிடித்தது, 1) தண்டிக்க சக்தி இருந்தும் மன்னிப்பது, 2) முயற்சியை விடாமல் நாடுவது, 3) வணக்கத்தில் மென்மையை கடைப்பிடிப்பது என உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) கூறுகிறார்".

Tags:    

மேலும் செய்திகள்