செஞ்சி விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Confiscation of government bus

Update: 2022-11-15 18:45 GMT


செஞ்சி, 

செஞ்சி அடுத்த நெகனூர்புதூரை சேர்ந்தவர் தீர்த்தமலை மகன் குப்பன் (வயது 60). இவர் கடந்த 2001-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி அரசு பஸ்சில் செஞ்சியில் இருந்து விழுப்புரத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பூத்தமேடு அருகே சென்ற போது பஸ் விபத்தில் சிக்கியது. இதில், பஸ்சில் பயணித்த குப்பனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

இது, தொடர்பாக கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். விபத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு குப்பன் செஞ்சி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி குணசேகர் 29.1. 2007-ல் அரசு போக்குவரத்து கழகம் குப்பனுக்கு ரூ.5 லட்சத்தி 29 ஆயிரத்து 800-ஐ நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டார்.

இதில் ஒரு பகுதியை மட்டும் நஷ்ட ஈடாக வழங்கிய போக்குவரத்துக் கழக நிர்வாகம் மீதி தொகையை வழங்காமல் நிலுவையில் வைத்திருந்தது. இந்நிலையில் நிலுவை தொகை வழங்காதது குறித்து மீண்டும் குப்பன் தனது வக்கீல் மூலம் செஞ்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி நளினகுமார் நிலுவைதொகையுடன் வட்டி சேர்த்து 7 லட்சத்து 62 ஆயிரத்து 743 ரூபாயை சம்பந்தப்பட்டவருக்கு வழங்க வேண்டும் எனவும் தவறினால் அரசு பஸ்சை ஜப்தி செய்யவும் அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் மீண்டும் தொகை வழங்காததால் கோர்ட்டு ஊழியர்கள் செஞ்சியில் இருந்து விழுப்புரம் சென்ற அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்