ரூ.1¼ கோடி கொள்ளை வழக்கில் சிக்கிய மோட்டார் சைக்கிளை மீட்கஈரோடு கோர்ட்டில் போலி ஆவணங்களை சமர்ப்பித்த பெண் உள்பட 2 பேர் கைது

பெண் உள்பட 2 பேர் கைது

Update: 2023-01-25 19:30 GMT

ரூ.1¼ கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சிக்கிய மோட்டார் சைக்கிளை மீட்க ஈரோடு கோர்ட்டில் போலி ஆவணங்களை சமர்ப்பித்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ரூ.1¼ கோடி கொள்ளை

ஈரோட்டில் உள்ள வங்கிகளில் இருந்து ஏ.டி.எம். மையங்களுக்கு பணத்தை கொண்டு சென்று நிரப்புவதற்கு தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.டி.எம். மையங்களுக்கு பணத்தை நிரப்புவதற்காக ஒரு வாகனத்தில் ரூ.1 கோடியே 32 லட்சம் கொண்டு செல்லப்பட்டது. இந்த பணத்தை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் உதவியுடன் 7 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து தப்பி சென்றது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். மேலும் ஈரோடு 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

2 பேர் கைது

இந்தநிலையில் கைதான 7 பேரில் ஏ.டி.எம். எந்திர வாகன டிரைவரான நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த மூர்த்தியின் மகன் கேசவன் (வயது 26) ஜாமீனில் வெளிவந்து உள்ளார். அவரது மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதால், அந்த வாகனத்தை மீட்க கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அப்போது அவர் மீட்பதற்காக கொடுத்த ஆவணத்தை மாஜிஸ்திரேட்டு சோதனை செய்து பார்த்தபோது, அது போலி ஆவணம் என்பது தெரியவந்தது. கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் கையெழுத்தை போட்டு போலி ஆவணம் சமர்ப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு தலைமை எழுத்தாளர் முத்துவேல் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேசவனையும், அவருக்கு உத்தரவாத கையெழுத்திட்ட கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்த ராமசாமியின் மனைவி லட்சுமி (53) என்பவரையும் நேற்று கைது செய்தனர். மேலும், போலி ஆவணங்கள் தயாரிக்க உடந்தையாக இருந்ததாக வீராசாமி, பிரபாகர், ராஜேந்திரன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்