தங்க சங்கிலி வாங்குவது போல் நடித்து ரூ.1¾ லட்சம் நகை திருட்டு

தங்க சங்கிலி வாங்குவது போல் நடித்து ரூ.1¾ லட்சம் நகையை திருடிய 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்;

Update:2022-07-18 20:29 IST

தங்க சங்கிலி வாங்குவது போல் நடித்து ரூ.1¾ லட்சம் நகையை திருடிய 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தங்கசங்கிலி

கோவை ராஜவீதியில் உள்ள ஒரு நகை கடைக்கு 2 பெண்கள் சென்றனர். அவர்கள் கடை ஊழியர்களி டம் தங்க சங்கிலி வாங்க விரும்புவதாக கூறினர். உடனே அந்த பெண்களிடம் ஊழியர்கள் தங்க சங்கிலிகளை எடுத்து காண்பித்தனர்.

அதில் ஒரு தங்க சங்கிலியை தேர்வு செய்த பெண்கள் அதன் எடை எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க சொன்னார்கள். உடனே ஊழியர்கள் அதன் எடையை பார்த்தபோது 40 கிராம் (5 பவுன்) இருந்தது.

அதன் விலை எவ்வளவு என்று கேட்ட போது ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேல் வரும் என்று கூறி உள்ளனர்.

கவரிங் நகை

உடனே அந்த பெண்கள், நாங்கள் வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்து விட்டு மாலையில் வந்து நகையை வாங்கிக் கொள்வதாக கூறி விட்டு சென்றனர். இதனால் அந்த பெண்கள் தேர்வு செய்த நகையை கடை ஊழியர்கள் தனியாக எடுத்து வைத்திருந்தனர்.

ஆனால் இரவு ஆகியும் அந்த பெண்கள் வரவில்லை. எனவே கடையை மூடும் போது ஊழியர்கள் நகைகளை சரிபார்த்தனர். இதில், அந்த பெண்கள் தேர்வு செய்து வைத்தது கவரிங் நகை என்பது தெரியவந்தது.

2 பேருக்கு வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கடை உரிமையாளரி டம் தெரிவித்தனர். உடனே கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், நகை வாங்க வந்த 2 பெண்கள் கடையில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருடிவிட்டு, தாங்கள் கொண்டு வந்த கவரிங் நகையை வைத்து விட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் பெரியகடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான 2 பெண்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்