லோக் அதாலத் மூலம் 1,557 வழக்குகளுக்கு தீர்வு

குமரி மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 1,557 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-05-13 18:45 GMT

நாகா்கோவில், 

குமரி மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 1,557 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

லோக் அதாலத்

நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் குமரி மாவட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நாகர்கோவில், குழித்துறை, பத்மநாபபுரம், இரணியல் மற்றும் பூதப்பாண்டி ஆகிய 5 கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நடந்தது. நாகர்கோவிலில் மட்டும் 5 அமர்வுகளில் லோக் அதாலத் நடந்தது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சொத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட 2,218 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

1,557 வழக்குகள் தீர்வு

நாகர்கோவில் கோர்ட்டில் மாவட்ட நீதிபதி அருள்முருகன் வழிகாட்டுதலின் பேரில் முதன்மை குற்றவியல் நீதிபதி கோகுல கிருஷ்ணன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஆசா கவுசல்யா சாந்தினி, முதன்மை சார்பு நீதிபதி சொர்ணகுமார், குற்றவியல் நீதிபதி தாயுமானவர், வன கோர்ட்டு நீதிபதி சிவசக்தி, நீதிபதிகள் விஜயலட்சுமி, கீர்த்திகா ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொரு வழக்குகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்பட்டது.

குமரி மாவட்டம் முழுவதும் நடந்த இந்த லோக் அதாலத் மூலம் 1,557 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இழப்பீடு தொகை ரூ.7 கோடியே 71 லட்சத்து 38 ஆயிரத்து 928 வழங்க ஆவண செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் பாலஜனாதிபதி கலந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்