ரேஸ் கார் பயிற்சியில் ஈடுபட்ட 16 வயது மாணவர் பலி
செட்டிபாளையம் அருகே ரேஸ் கார் பயிற்சியில் ஈடுபட்ட 16 வயது மாணவர் பரிதாபமாக இறந்தார்.;
செட்டிபாளையம் அருகே ரேஸ் கார் பயிற்சியில் ஈடுபட்ட 16 வயது மாணவர் பரிதாபமாக இறந்தார்.
பள்ளி மாணவர்
ஹரியானா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்தவர் கிரிஸ்நெந்த் சட்டர்ஜி (வயது48). இவர் ஹரியானா மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஆராதனா தண்ட் சட்டர்ஜி, இவர்களுடைய மகன் நனம் சட்டர்ஜி (16).
இவர் ஹரியானா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு, கார் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வம் இருந்ததால், அங்குள்ள தனியார் கார் ரேஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.
ரேஸ்கார் பயிற்சி
இதையடுத்து 2-ம் கட்ட பயிற்சிக்காக நனம்சட்டர்ஜி தனது தாயு டன் கடந்த மாதம் 29-ந் தேதி பயிற்சி மையத்தினருடன் கோவை வந்தார். அவர் கடந்த 1-ந் தேதி செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரிமோட்டார்ஸ் ஸ்பீடு வே ஓடுதளத்தில் ரேஸ்காரில் பயிற்சி மேற்கொண்டதாக தெரிகிறது.
அங்கு எல்.ஜி.பி 1300 என்ற ரேஸ் காரில் நனம்சட்டர்ஜி பயிற்சி யில் ஈடுபட்டார். அப்போது கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அந்த கார் ஓடுதளத்தை விட்டு விலகி ஓரத்தில் இருந்த இரும்புத்தடுப்பு மீது பயங்கரமாக மோதியது.
சிகிச்சை பலனின்றி சாவு
இதில் தலை, இடுப்பு பகுதிகளில் படுகாயம் அடைந்த நனம் சட்டர்ஜியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சுந்தரா புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.