முதியவர் வீட்டில் கஞ்சா மறைத்து வைத்த 2 பேர் கைது

முன்விரோதத்தால் போலீசில் சிக்க வைக்க முதியவர் வீட்டில் கஞ்சா மறைத்து வைத்து நாடகமாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-07-04 00:15 IST

சாயல்குடி, 

முன்விரோதத்தால் போலீசில் சிக்க வைக்க முதியவர் வீட்டில் கஞ்சா மறைத்து வைத்து நாடகமாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கஞ்சா பதுக்கல்

சாயல்குடி அருகே உள்ள ஒப்பிலான் கிராமத்தை சேர்ந்தவர் சீனி முகம்மது(வயது 60) என்பருடைய வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக சாயல்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையிலான போலீசார் சீனி முகம்மது வீட்டில் சோதனை செய்தனர். அங்கு ஒரு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் விருதுநகர் மாவட்டம் பூலாங்கால் கிராமத்தை சேர்ந்த ஜியாவுதீன்கக்(30), அவரது உறவினரான பைசல் அகமது(25) ஆகியோர் கஞ்சாவை விலைக்கு வாங்கி சீனிமுகம்மது வீட்டில் பதுக்கி வைத்தது தெரியவந்தது.

2 பேர் கைது

மேலும் போலீசாரின் விசாரணையில், சீனிமுகம்மதுவும், அதே கிராமத்தை சேர்ந்தவர் நாசர்(62) என்பவரும் சம்பந்திகள் ஆவர். இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு சீனி முகம்மது, நாசரை தாக்கியுள்ளார். தற்போது இருவரும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் நாசர் தன்னை சீனி முகமது தாக்கிய விவரத்தை தனது தங்கை மகனான ஜீயாவுதீன் கக்கிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜீயாவுதீன் சேக், பைசல் அகமதுவுடன் சேர்ந்து சீனி முகம்மதுவை சிக்க வைக்கும் நோக்கில் அவருடைய வீட்டில் ஒரு கிலோ கஞ்சாவை மறைத்து வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து சாயல்குடி போலீஸ் நிலையத்திற்கு போன் மூலம் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசாரின் விசாரணையில் இருவரும் கஞ்சாவை மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜியாவுதீன் கக், பைசல் அகமது ஆகியோரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்