கரூர் துயர சம்பவம்: காவல்துறை அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன்
கரூர் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.;
சென்னை,
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான கரூர் சுற்றலா மாளிகையில் தற்காலிகமாகச் சிபி.ஐ.யின் விசாரணை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் 12 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் கரூரில் தங்கி இந்த வழக்கைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகக் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதாவது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா, ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்த், டி.எஸ்.பி. செல்வராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சம்மன் அனுப்பப்பட்ட அனைவரும் வரும் 29ஆம் தேதி (29.12.2025) டெல்லியுள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.