நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ குற்றவாளிகள் 29 பேருக்கு தண்டனை
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 26 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.;
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முற்றிலும் தடுக்கும் நோக்கில், காவல்துறையின் சார்பில் தீவிர நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரப்படுகிறது. மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தனிக் கவனம் செலுத்தி குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்படி போக்சோ வழக்குகளின் நீதிமன்ற விசாரணைகளை சம்பந்தப்பட்ட உட்கோட்ட டி.எஸ்.பி.க்கள் நேரடியாக கணிகாணித்தும், அவ்வழக்குகளின் விசாரணையின் போது சாட்சிகளுக்கு முழு அளவில் பாதுகாப்பு அளித்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கும் விதமாக அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
அதன்படி 2025-ம் ஆண்டில் இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 28 போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 29 குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் ஒரு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை, ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ஒரு குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, நான்கு குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, நான்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டில் மட்டும் போக்சோ வழக்குகளில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த 26 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த ஆண்டில் போக்சோ வழக்குகளில் சரித்திர பதிவேடு (History Sheet) உடைய நான்கு நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில், போக்சோ வழக்கில் முதல் முறையாக இந்த ஆண்டு தூக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
போக்சோ குற்றங்களிலிருந்து குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாகவும் விழிப்புடனும் இருப்பதற்காக, மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வையும், குற்றங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தருவதில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.