தமிழக அரசுடன் இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை
இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31-ந்தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது.
ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.
இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்றும் திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றி அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன், ஆசிரியர் சங்க இயக்க பொதுச் செயலர் ராபர்ட் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.