அதிக லாபம் தருவதாக கூறி ரூ.3 கோடி ‘ஆன்லைன்’ மோசடி: 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை,
சமீப காலமாக ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. பிரபலமான நிதி நிறுவனங்களின் பெயரை போலியாக பயன்படுத்தி, அப்பாவி பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில் அதிக லாபம் தருவதாக கூறி சென்னையில் ரூ.3 கோடி அளவில் ‘ஆன்லைன்’ மோசடி நடைபெற்றுள்ளது.
சென்னை அடையார் பகுதியை சேர்ந்தவர் சத்தியநாதன் (வயது 68). இவர், ‘ஆன்லைன்' வர்த்தகத்தில் ரூ.3.4 கோடி முதலீடு செய்தார். அதிக லாபம் தருவதாக ஏமாற்றி 'ஆன்லைன்' மோசடி கும்பல் ரூ.3.4 கோடியையும் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் 'சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பால சுப்பிரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முருகேஷ் (49), எப்சி (35), பஞ்சவர்ணம் (33) ஆகிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் 3 பேரும் தங்களது வங்கி கணக்கில் மோசடி செய்த பணத்தை பரிவர்த்தனை செய்துள்ளனர். இதன் பேரில் இவர்கள் 3 பேரும் 'சைபர் கிரைம்' போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.