கொள்ளையனை கொன்ற 2 பேர் கைது

திருச்சுழி அருகே திருடிய நகை, பணத்தை தர மறுத்ததால் கொள்ளையனை கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-08 19:08 GMT

திருச்சுழி, 

திருச்சுழி அருகே திருடிய நகை, பணத்தை தர மறுத்ததால் கொள்ளையனை கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளையன் படுகொலை

திருச்சுழி அருகே ஆனைக்குளத்தை சேர்ந்தவர் பகவதி (வயது 47), இவர் பூட்டிய வீடுகளை நோட்மிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. பகவதி திருடி வைத்துள்ள பணம், நகைகளை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் அவ்வப்போது மிரட்டி வாங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி பகவதியிடம் திருட்டு பணம், நகை இருப்பதாக கூறி வீட்டில் இருந்த அவரை இவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று உள்ளனர்.

ஆனைக்குளம் அருகே காத்தான்பட்டி பெரியண்ணசாமி கோவில் பின்புறம் வைத்து திருடி வைத்துள்ள பணத்தையும், நகையையும் அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 பேர் கேட்டதாகவும் இதற்கு பகவதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் பகவதியை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டினார்கள். இதில் பகவதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

2 பேர் கைது

இந்த நிலையில். பகவதியின் மனைவி சாரதா தெரிவித்த தகவலின் அடிப்படையில் திருச்சுழி போலீசார் கமுதி தாலுகா மறைக்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற மண்டக்குமார் (வயது 22), கமுதி தாலுகா உடையார் கூட்டத்தை சேர்ந்த முகேஷ் கண்ணா (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்