தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

கோவை அருகே ஈச்சனாரியில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.;

Update:2023-03-21 00:15 IST

கோவை

கோவை அருகே ஈச்சனாரியில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

கல்லூரி மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெல்பட்டு ரோட்டை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகன் அலெக்ஸ் ஜோசப் (வயது 20), திண்டுக்கல் மூஞ்சுக்கல் பகுதியை சேர்ந்தவர் சல்மான் (20). இவர்கள் 2 பேரும் கோவை மதுக்கரை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர்.

இதற்காக கல்லூரி அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் அலெக்ஸ் ஜோசப், சல்மான் ஆகிய 2 பேரும் டீ குடிப்பதற்காக தங்களது நண்பனின் மோட்டார் சைக்கிளில் மலுமிச்சம்பட்டி பகுதிக்கு சென்றனர்.

2 பேர் பலி

மோட்டார் சைக்கிளை அலெக்ஸ் ஜோசப் ஓட்டினார். சல்மான் பின்னாடி அமர்ந்து இருந்தார். இதையடுத்து 2 பேரும் மலுமிச்சம்பட்டியில் டீ குடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கோவை-பொள்ளாச்சி ரோட்டில் ஈச்சனாரி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாரத விதமாக மோட்டார் சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.இந்த விபத்தில் கண் இமைக்கும் நேரத்தில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த தகவலின் பேரில் மதுக்கரை போலீசார் விரைந்து வந்து கல்லூரி மாணவர்கள் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்