லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

திருவெண்ணெய்நல்லூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். புதுச்சேரியில் நண்பரின் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது

Update: 2023-06-04 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

கல்லூரி மாணவர்கள்

திருச்சி மணச்சநல்லூர் மாதவப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவா் ராஜா மகன் ராகுல்(வயது 19). மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூரை சேர்ந்தவர் ஷேக்அலாவுதீன் மகன் ஷபீக்(19).

நண்பர்களான இவா்கள் இருவரும் திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்த நிலையில் ராகுல், ஷபீக் ஆகிய இருவரும் நண்பரின் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு புதுச்சேரிக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் அங்கிருந்து நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி புறப்பட்டனர்.

உடல் நசுங்கி பலி

இந்த நிலையில் காலை 6.45 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு விதைப்பண்ணை அருகில் வந்தபோது, முன்னால் சிமெண்டு கலவை ஏற்றி சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ராகுல், ஷபீக் ஆகியோா் லாரி சக்கரத்தில் சிக்கினர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் இருவர் மீதும் லாரியின் சக்கரம் ஏறி இறங்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தனர்.

லாரி டிரைவர் கைது

விபத்து பற்றி அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து அவர்கள் பலியான ராகுல், ஷபீக் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் லாரி டிரைவரான நாமக்கல்லை சேர்ந்த நடேசன் மகன் அருள்(30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்