தொழிலை விரிவுபடுத்துவதற்காக ரூ.2¾ கோடி கடன் வாங்கி மோசடி; சின்னசேலம் ஜவுளிக்கடை உரிமையாளர் கைது
தொழிலை விரிவுபடுத்துவதற்காக ரூ.2¾ கோடி கடன்வாங்கி மோசடி செய்த சின்னசேலம் ஜவுளிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.;
கடன்வாங்கி மோசடி
கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் வசித்து வருபவர் ராஜா மகன் கபிலன். இவரிடம் சின்னசேலம் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிவராம்ஜி மகன் பிரகாஷ்சிர்வி என்பவர் ஜவுளி தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த ஆண்டு ரூ.4 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இதேபோல் மேலும் 22 பேரிடம் பிரகாஷ்சிர்வி பணமாகவும், ஜவுளி மொத்தமாக கொள்முதல் செய்தது என சுமார் ரூ.2 கோடியே 74 லட்சத்து 94 ஆயிரத்து 210 வரை கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.
போலீசில் புகார்
இதையடுத்து கடன் கொடுத்த கபிலன் உள்ளிட்டோர் பிரகாஷ்சிர்வியிடம் கொடுத்த பணத்தை கேட்டனர். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இதுபற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில், சின்னசேலம் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்த பிரகாஷ்சிர்வி கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், திருச்சி பகுதியை சேர்ந்த மொத்த ஜவுளி கடைக்காரகள் 10 பேரிடம் 33 லட்சத்து 93 ஆயிரத்து 710 ரூபாயும், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியை சேர்ந்த 13 பேரிடம் சுமார் 2 கோடியே 41 லட்சத்து 500 ரூபாயும் கடனாக பெற்றுக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து பிரகாஷ்சிர்வியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.