டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர் - 9 மணி நேரம் விசாரணை

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் ஆஜராகினர்.;

Update:2025-12-30 01:49 IST

புதுடெல்லி,

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினார். அப்போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையை, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு குழு கண்காணித்து வருகிறது.

இந்த குழுவினரிடம் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், கரூர் மாவட்டச்செயலாளர் மதியழகன் ஆகியோர் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனால் இந்த வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது. இந்தநிலையில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி, புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட 4 பேரும் நேற்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேற்று காலை ஆஜராகினர். அதேபோல் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஷ் தங்கையா, கூடுதல் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த் ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானார்கள்.

சி.பி.ஐ. அதிகாரி சுனில்குமார் தலைமையிலான குழுவினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். திட்டமிட்ட நேரத்திற்குள் நிகழ்ச்சி நடந்ததா? திட்டமிட்ட நேரத்திற்கு மேலாக கூட்டம் நடந்ததா? என்பது குறித்தும், நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஏதாவது காலதாமதம் ஏற்பட்டதா?, கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வரக்கூடாது என்று த.வெ.க. சார்பில் அறிவுறுத்தப்பட்டதா? என்பது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு புஸ்சி ஆனந்த் மற்றும் த.வெ.க. நிர்வாகிகள் உரிய பதிலை அளித்தனர். அதனை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். அதேபோல், போலீசாரிடம் கூட்டத்திற்கு எத்தனை மணிக்கு அனுமதி வழங்கப்பட்டது, போலீஸ் துறை சார்பில் எவ்வுளவு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர், கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அங்கு நடந்தது என்ன? என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பி அதனை அவர்கள் பதிவு செய்து கொண்டனர்.

புஸ்சி ஆனந்த் மற்றும் த.வெ.க. நிர்வாகிகளிடம் காலையில் தொடங்கிய விசாரணை இரவு 7.25 மணி வரை நீடித்தது. சுமார் 9 மணி நேரத்திற்கு மேலாக இந்த விசாரணை நீடித்தது. இந்த விசாரணை தொடர்ந்து இன்றும் (செவ்வாய்க்கிழமை) நீடிக்கும் என்று தெரிகிறது. தொடர்ந்து விஜய்க்கும் சம்மன் அனுப்ப சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்