‘மதக்கலவரம் செய்வோருக்கு சம்மட்டி அடி கொடுக்கிறார் முதல்-அமைச்சர்’ - கனிமொழி எம்.பி.
பா.ஜ.க. மதக்கலவரம், காழ்ப்புணர்ச்சியை தவிர வேறு எதையும் வைத்து அரசியல் செய்யவில்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பிலான, தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
அன்கன்ட்ரோலபுள் முதல்-அமைச்சர் என அனைவராலும் அழைக்கப்படும் முதல்-அமைச்சருக்கு வணக்கம். எல்லோரும் பாராட்டக்கூடிய, எதிரிகள் அச்சப்படக்கூடிய முதல்-அமைச்சர். மாநாட்டு ஏற்பாடுகளை செந்தில் பாலாஜி மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். பெண்களுக்கான ஆட்சியை, பெண்களை பெருமைப்படுத்தும் ஆட்சியை நடத்தும் முதல்-அமைச்சருக்கு நன்றி.
உங்களிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்திருக்கிறோம் என்பதற்காக அரசமைப்பு புத்தகம் பரிசளித்தோம். தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்த நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு முதல்-அமைச்சருக்கு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.30 கோடி சகோதரிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப்படுகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம் என்பதை இந்த சகோதரிகள் சொல்வார்கள்.
உயர்கல்விக்கு செல்லக்கூடிய பெண்கள் சராசரியில் நாம் வளர்ந்த நாடுகளுக்கு நிகராக இருக்கிறோம். பாதுகாப்பான மாநிலம் என்பதால் அதிகமாக வேலைக்கு போகும் பெண்கள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவிலேயே வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உள்ளது தமிழ்நாட்டில்தான்.
இந்திய அளவில் பெண்கள் உயர் கல்வி பெறுவது 28 சதவீதமாக தான் உள்ளது. ஆனால் தமிழகத்தில் 48 சதவீதம் பெண்கள் உயர் கல்வி பெறுகிறார்கள். வளர்ந்த நாடுகளில் கூட இது போன்ற நிலை இல்லை. சங்கிக் கூட்டமும் அடிமை கூட்டமும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் நமது போராட்டத்திற்கு பின்பு தான் நடவடிக்கையை எடுக்கப்பட்டது.
தி.மு.க. ஆட்சி வந்த பின்பு இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. உத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுமி பாலியல் வழக்கில் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெண்களுக்கு பா.ஜனதா பாதுகாப்பு கொடுக்கும் லட்சணம் இதுதான். கோவை பாலியல் சம்பவத்தில் 30 நாட்களில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.
பா.ஜனதா முதன் முதலில் ஆட்சிக்கு வந்த போது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார்கள். ஆனால் இப்போது 100 நாள் வேலையை கூட குறைத்து விட்டார்கள். பா.ஜனதா மதக்கலவரம், காழ்ப்புணர்ச்சியை தவிர வேறு எதையும் வைத்து அரசியல் செய்யவில்லை. அதற்கு சம்மட்டி அடி கொடுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது பின்னால் அணி திரள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.