கேரள முதியவர்கள் 2 பேருக்கு சிறை

போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்த வழக்கில் கேரள முதியவர்கள் 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-07-14 18:22 GMT

கன்னியாகுமரி திருவூரூரை சேர்ந்தவர் ராஜேந்திரகுமார். இவருக்கு, கேரள மாநிலம் வைக்கத்தில் 38 சென்ட் நிலம் இருக்கிறது. அந்த நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து வைக்கத்தை சேர்ந்த பாலகோபால் (வயது 60), கோட்டயம் புதுபள்ளியை சேர்ந்த தங்கச்சன் (76) ஆகியோர் நிலத்தை அபகரிக்க முயன்றனர். இதற்காக பழனியில் பத்திரப்பதிவு செய்தனர். இதை அறிந்த ராஜேந்திரகுமார், கடந்த 1997-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது. தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு மோகனா வழக்கை விசாரித்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து அவர் தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கும் இந்திய தண்டனை சட்டம் 465, 471 ஆகிய பிரிவுகளுக்கு தலா 2 ஆண்டுகள், 467, 468, 420 ஆகிய பிரிவுகளுக்கு தலா 3 ஆண்டுகள், 417 பிரிவுக்கு ஓராண்டு, 120 பி- பிரிவுக்கு 3 மாதம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.3 ஆயிரத்து 500 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் சிறை தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு மோகனா உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்