லிப்ட்டில் சிக்கிய 2 பேர் பத்திரமாக மீட்பு
தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் லிப்ட்டில் சிக்கிய 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.;
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் லேப் டெக்னீஷியன்களாக பணியாற்றி வரும் முத்துமாரி மற்றும் ஆரோக்கிய செல்வ மேரி ஆகிய 2 பேரும் முதல் மாடியில் உள்ள ஆய்வகத்திற்கு செல்வதற்காக நேற்று காலையில் லிப்ட்டில் சென்றனர். அப்போது திடீரென லிப்ட் பழுதாகி நின்று விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 2 பேரும் அபயக்குரல் எழுப்பினர். இவர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்த மருத்துவக்கல்லூரி ஊழியர்கள், அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை.
எனவே இதுகுறித்து தூத்துக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். லிப்ட்டில் சிக்கிய 2 பேரையும் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.