விவசாயியை கொல்ல முயன்ற வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் 2 பேர் சரண்

புதன்சந்தை அருகே விவசாயியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 வாலிபர்கள் நாமக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.;

Update:2022-08-24 22:08 IST

புதன்சந்தை அருகே விவசாயியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 வாலிபர்கள் நாமக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

விவசாயியை கொல்ல முயற்சி

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள சேவாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 51). விவசாயி. இவர் கடந்த 2-ந் தேதி மாலை 5.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகே மர்மகும்பல் முருகேசனை வழிமறித்து, சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றது.

இதில் படுகாயம் அடைந்த முருகேசன், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் பெரம்பலூர் தாலுகா அல்லிநகரம் அருகே உள்ள அழகிரிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்த விஜயகுமார் (43), ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தை சேர்ந்த கார்த்திக் (21), மண்ணச்சநல்லூர் புவனேஸ்வரி நகரை சேர்ந்த பழனிசாமி (25) மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

2 பேர் சரண்

நாமக்கல் மாவட்டம் கல்குறிச்சி பகுதியை சேர்ந்த அஜித் (23), தென்னரசு (21) ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே நேற்று இவர்கள் நாமக்கல் 2-வது குற்றவியல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு விஸ்வநாதன் முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களை மாஜிஸ்திரேட்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்