ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி உடல்நலம் குறித்து டாக்டர் ராமதாஸ், இலங்கை மந்திரி விசாரிப்பு

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி உடல்நலம் குறித்து டாக்டர் ராமதாஸ், இலங்கை மந்திரி செந்தில் தொண்டமான் நேரில் நலம் விசாரித்தனர். கருணாநிதிக்கு சிகிச்சை தி.மு.க. தலைவர் கருணாநிதி தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டைய

Update: 2016-12-20 21:15 GMT

சென்னை,

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி உடல்நலம் குறித்து டாக்டர் ராமதாஸ், இலங்கை மந்திரி செந்தில் தொண்டமான் நேரில் நலம் விசாரித்தனர்.

கருணாநிதிக்கு சிகிச்சை

தி.மு.க. தலைவர் கருணாநிதி தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் கடந்த 15–ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.

டாக்டர்கள் தொடர் சிகிச்சையால் அவர் உடல்நலம் தேறிவிட்டார். இன்னும் ஒரு சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும், பின்னர் வீட்டில் ஓய்வு எடுத்து சிறிது நாட்கள் சிகிச்சை பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

உடல்நலம் விசாரிப்பு

இந்தநிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இலங்கை மந்திரி செந்தில் தொண்டமான், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விவேக், பாடல் ஆசிரியர் பா.விஜய், பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, விவசாய தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தெய்வசிகாமணி உள்ளிட்டோர் காவேரி ஆஸ்பத்திரிக்கு நேற்று வந்தனர்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., ஆகியோரிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து அவர்கள் விசாரித்தனர்.

டாக்டர் ராமதாஸ் பேட்டி

டாக்டர் ராமதாஸ் கூறும்போது, ‘என் இனிய நண்பர் கலைஞரின் (கருணாநிதி) உடல்நலம் விசாரிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்தேன். அவர் இன்னும் 2, 3 நாட்களில் உடல்நலம் தேறி வீடு செல்வார் என்ற நல்ல செய்தியை மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் சொன்னார்கள். அவர் 100 வயதை கடந்து வாழ வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அவர் நலம் பெற்று வீடு திரும்பியதும் ஒரு நாள் அவரை வீட்டிற்கு சென்று பார்க்க விரும்புகிறேன்’ என்றார்.

இலங்கை அதிபர் உத்தரவு

இலங்கை மந்திரி செந்தில் தொண்டமான் கூறியதாவது:–

முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து, மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி.யை சந்தித்து பேசினேன். வெள்ளிக்கிழமை கருணாநிதி வீடு திரும்புவார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரடியாக விசாரித்துவிட்டு வருமாறு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார். அதன்பேரில் நேரில் விசாரிக்க வந்தோம். இலங்கை மக்களும் அவர் உடல்நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

செந்தில் தொண்டமானுடன் இலங்கை துணைத்தூதர் கிருஷ்ணமூர்த்தியும் வந்திருந்தார்.

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர்–நடிகர் விவேக்

டி.ராஜா கூறும்போது, கருணாநிதி வெள்ளிக்கிழமை வீடு திரும்புவார் என்ற தகவல் மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. அவர் உடல்நலம் தேறி குணம் பெற இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் கூறும்போது, ‘கலைஞர் என்ற ஒரு வார்த்தைக்கு கருணாநிதி தான் அர்த்தம். இன்னும் அவர் கலையை நேசிக்கிறார், கலையை காதலிக்கிறார். அதனால் அவருக்கு எந்த வியாதியும் ஒன்றும் செய்யாது. 100 வயதுக்கு மேலே நம்மோடு வாழ்ந்து நம் எல்லோரையும் சந்தோஷப்படுத்துவார்’ என்றார்.

நடிகர் விவேக் கூறும்போது, ‘மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியிடம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர்கள் கருணாநிதி விரைவாக குணம் அடைந்து வருகிறார் என்றும், இன்னும் 2, 3 தினங்களில் வீடு திரும்புவார் என்றும் கூறினார்கள்’ என்றார்.

மேலும் செய்திகள்