மெரினாவில் செல்போன் டார்ச் லைட் அடித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், மெரினாவிலும் இளைஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் டார்ச் அடித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

Update: 2017-01-17 13:56 GMT
சென்னை,

மதுரை அலங்காநல்லூரில் சுப்ரீம் கோர்ட்டு தடையை மீறி பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காளை மாடுகளை பறிமுதல் செய்தனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் காட்டு தீ போல பரவியது. 

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தடியடி நடத்திய போலீசார் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னையில் சமூக வலைத்தளம் மூலம் இந்த போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 9.30 மணியளவில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுக் கூடினர். 

அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்கள் சமாதானம் அடையவில்லை. முதலமைச்சர் வந்து பேசும் வரையில் போராட்டம் தொடரும் என்று கூறிவிட்டனர். இதனால் போலீசாரும் வேறு வழியின்றி அப்பகுதியில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையே இன்று மாலையில் மெரினா கடற்கரை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போதும் கலைந்து செல்லாத இளைஞர்கள், தங்களிடம் உள்ள செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்