தமிழ்நாட்டில் முதல் முறையாக சோலார் மூலம் இயங்கும் படகு சேவை தொடக்கம்

தமிழ்நாட்டில் முதல் முறையாக சோலார் மூலம் இயங்கும் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-01 09:22 IST

கடலூர்,

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் முன்னெடுப்பாக மாநிலத்தின் முதல் காலநிலை மீள்திறன்மிகு கிராமம் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் தமிழ்நாட்டில் முதல் முறையாக சோலார் (சூரிய ஒளி சக்தி) மூலம் இயங்கும் படகு சேவை தொடக்க விழா பிச்சாவரம் சுற்றுலா மையம் படகு இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, படகு சேவையை தொடங்கி வைத்து, அதில் அலுவலர்களுடன் பயணம் செய்தார். பின்னர் இது பற்றி அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக பல்வேறு மாவட்டங்களில் 11 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவுக்குட்பட்ட கிள்ளை பேரூராட்சி இடம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிள்ளை பகுதியை பசுமை வளாகமாக மேம்படுத்திடும் வகையில் வனத்துறை, மீன்வளத்துறை, நீர்வளத்துறை ஆகிய துறைகளின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி பிச்சாவரம் படகு இல்லத்தில் எரிபொருள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, காற்று மற்றும் நீர் மாசுபாட்டை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை சுற்றுலாவாக ஏற்படுத்திடும் வகையிலும், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொள்ளும் கிராமங்களின் மீள்திறன்மிகு வளர்ச்சியை வலுப்படுத்தவும் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 100 சதவீதம் சூரிய ஆற்றலால் இயக்கப்படும் சோலார் மின்படகு சேவையை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். இந்த படகில் ஒரே நேரத்தில் 14 பேர் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்