ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை உள்பட பல இடங்களில் மாணவர்கள் ரெயில் மறியல்

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி நேற்று சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் ரெயில் மறியல் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

Update: 2017-01-19 22:45 GMT
சென்னை,

என்ஜினில் ஏறிய மாணவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார்.

சென்னையில் ரெயில் மறியல்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்திவரும் வேளையில் நேற்று சில மாணவர்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் 50–க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பதி செல்ல தயாராக இருந்த கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து மாணவர்கள் போராட்டம் செய்தனர். ‘பீட்டாவை தடைசெய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ போன்ற கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடத்தில் பூக்கடை போலீஸ் துணை கமி‌ஷனர் சங்சாய் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்களுடைய போராட்டம் அறவழியில் மட்டுமே இருக்க வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்று மாணவர்களை கலைந்து செல்லும்படி கூறினார். இதையடுத்து மாணவர்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

என்ஜின் மீது கல்வீச்சு

மதுரை ரெயில் நிலையத்திற்குள் நுழைந்த மாணவர்கள் 4–வது நடைமேடையில் இருந்த மதுரை–ராமேசுவரம் சுற்றுலா ரெயிலை மறித்தும், என்ஜின் மீது ஏறியும் போராட்டம் நடத்தினர். 30 நிமிடங்களுக்கு மேல் இந்த போராட்டம் நீடித்தது. மாணவர்கள் அங்கிருந்து செல்லூர் பகுதிக்கு சென்று அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செல்லூர் பாலத்தில் வந்த கோவை–நாகர்கோவில் பயணிகள் ரெயில் என்ஜின் மீது கல்வீசி தாக்கினர். இதில் என்ஜின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தியதும் மாணவர்கள் என்ஜின் மேல் ஏறி நின்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மின்சாரம் பாய்ந்து காயம்

சேலம் டவுன் ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்ற கல்லூரி மாணவர்கள் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் அங்கு வந்த காரைக்கால்–பெங்களூரு பயணிகள் ரெயிலை மறித்து என்ஜின் மீது ஏறி கோ‌ஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி கலைந்து செல்ல வைத்தனர்.

அதேசமயம், மறுமார்க்கத்தில் சேலம் ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து வந்த பெங்களூரு–காரைக்கால் பயணிகள் ரெயிலையும் மறித்தனர். மாணவர்கள் ரெயிலின் என்ஜின் மீது ஏறியும் கோ‌ஷம் போட்டனர். இரவு வரை போராட்டம் நீடித்ததால் பயணிகள் இறங்கி சென்றனர்.

ரெயில் என்ஜின் மீது ஏறி போராட்டம் நடத்திய லோகேஷ் (17) என்ற மாணவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். படுகாயம் அடைந்த அவரை சக மாணவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சையில் மறியல்

தஞ்சை ரெயில் நிலையத்தில் மாணவர்கள் சென்னை–திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலையும், நெல்லை–மயிலாடுதுறை பயணிகள் ரெயிலையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது. போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்தி வெளியே அனுப்பினர். அதன்பின்னர் ரெயில்கள் புறப்பட்டு சென்றன.

மேலும் செய்திகள்