சசிகலா பதவிஏற்பு எப்போது என்பதில் குழப்பம்; நாளையும் கவர்னர் சென்னை வரமாட்டார் என தகவல்
சசிகலா பதவிஏற்பு எப்போது என்பதில் தெளிவின்மை நீடிக்கிறது. இந்நிலையில் நாளையும் கவர்னர் சென்னை வரமாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.;
சென்னை,
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டசபை அ.தி.மு.க. தலைவராக (முதல்–அமைச்சர்) அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, முதல்–அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். சசிகலா 9–ந்தேதி முதல்–அமைச்சராக பதவி ஏற்பார் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் முதலில் தெரிவித்தன.
ஆனால் அதற்கு முன்னதாகவே, அதாவது இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் முதல்–அமைச்சராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நேற்று தீவிரமாக தொடங்கின. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.
கவர்னர் வித்யாசாகர் ராவ் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11 மணி அளவில் சென்னை வந்து சேருவார் என்றும், பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, சட்டசபை அ.தி.மு.க. கட்சி தலைவராக தான் தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான தீர்மான நகலை அவரிடம் வழங்கி, முதல்–அமைச்சராக பதவி ஏற்க தன்னை அழைக்குமாறு கேட்டுக்கொள்வார் என்றும் கூறப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழகத்தின் 13–வது முதல்–அமைச்சராக சசிகலா பதவி ஏற்பார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சென்னைக்கு கவர்னர் இன்று வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்த கவர்னர் அங்கிருந்தபடியே சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். சென்னைக்கு கவர்னர் வருவது ஒத்திவைக்கப்பட்டதால் சசிகலா முதல்–அமைச்சராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் சசிகலா பதவி ஏற்பது எப்போது என்பதில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதனிடையே விழா நடைபெறும் இடமான சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இருந்த போலீஸ் பாதுகாப்பு நேற்று இரவில் விலக்கிக்கொள்ளப்பட்டது. மேலும் வெளியூர்களில் இருந்து பதவி ஏற்பு விழாவுக்கு வந்து கொண்டிருந்த கட்சி நிர்வாகிகளை திரும்ப செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
சசிகலா, புதிய முதல்–அமைச்சராக இன்று(செவ்வாய்க்கிழமை) பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பில் நேற்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன.
ஆனால் கவர்னர் இன்று சென்னை வரவில்லை என்பதை அறிந்ததும் அங்கு போடப்பட்டு இருந்த பாதுகாப்பு நேற்று இரவில் வாபஸ் பெறப்பட்டது.
திட்டம் இல்லை
சசிகலா பதவிஏற்பு விவகாரத்தில் நிச்சயமற்ற நிலை உள்ளநிலையில், நாளையும் சென்னை திரும்பும் திட்டம் கவர்னரிடம் இல்லை என்று தகவல்கள் தெரிவித்து உள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கலந்துக் கொள்ள வேண்டிய அனைத்து நிகழ்ச்சியையும் அவர் ரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே நாங்கள் கவர்னர் வருகைக்காக காத்திருக்கிறோம். சசிகலா பதவியேற்கும் நிகழ்ச்சியானது விரைவில் நடக்கும் என நம்புகின்றோம். எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்வு செய்து உள்ளதால், கவர்னர் தள்ளிப்போட முடியாது என அதிமுக தரப்பு தெரிவித்து உள்ளதாக மற்றொரு ஆங்கில மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.