வெளிநாட்டு வேலை என்று கூறி ரூ.35.55 லட்சம் பண மோசடி: வட மாநில நபர் கைது
திருநெல்வேலியில் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நபர், போலி விசா மற்றும் டிக்கெட் கொடுத்து ரூ.35.55 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.;
திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம், அமிர்தம்நகரை சேர்ந்த ஜெய செந்தில்குமார் (வயது 52), அமெரிக்காவில் கச்சா எண்ணெய் எடுக்கும் நிறுவனத்தில் 27 ஆண்டுகளாக பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்று, சொந்த ஊரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவர் முன்னதாக பணியாற்றிய வேலை தொடர்பாக, அவரது இன்ஸ்டாகிராம் id-ல் Libraa off shore pvt ltd என்ற நிறுவனத்தின் பெயரில் விளம்பரத்தின் மூலம் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ்சிங் என்பவர் பிரசாந்த் எனும் பெயரில் அறிமுகமாகியுள்ளார்.
பின்னர் தனது ஊரில் உள்ள 25 இளைஞர்களுக்கு மெக்கானிக் ராஸ்டாபோட் என்ற வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, ஜெய செந்தில்குமாரிடம் வங்கி மூலமாக மொத்தம் ரூ.35 லட்சத்து 55 ஆயிரம் பணத்தை பெற்று கொண்டு இந்தோனேஷியா செல்ல போலி விசா மற்றும் போலி டிக்கெட் கொடுத்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக கூறி, மேற்சொன்ன நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜெய செந்தில்குமார் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனிடம் புகார் அளித்ததார்.
அந்த புகாரின்பேரில், புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு-I டி.எஸ்.பி. விஜயகுமார் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் விசாரணை மேற்கொண்டார். அதில் ஜெய செந்தில்குமார், உமேஷ்சிங்கிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற்றப்பட்ட விவரம் உண்மை என தெரிய வந்ததின் பேரில், 13.11.2025 அன்று மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், உமேஷ்சிங் என்பவரை ஹரியானா மாநிலம் சென்று மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளப்பாண்டி, தலைமை காவலர்கள் முத்துராமலிங்கம், கலையரசன் ஆகியோர் சேர்ந்து கைது செய்து, திருநெல்வேலிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் வெளிநாட்டு வேலைக்காக போலியாக விசா மற்றும் டிக்கெட் கொடுத்து பண மோசடி செய்த குற்றவாளியை சிறப்பாக செயல்பட்டு, கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.