வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்தளம் அமைக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

விதிகளின்படி வாக்குச்சாவடிகளை மாற்றியமைக்க வேண்டும் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.;

Update:2025-12-17 21:41 IST

சென்னை,

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச்சாவடிகளில் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் மாற்றுத்திறனாளியான வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச்சாவடிகளில் சாய்தளம் அமைத்தல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை கண் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான முத்த வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகள் சட்ட விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதே சமயம், தேர்தல் ஆணைய இணையதளங்களை மாற்றியமைக்க மூன்றாவது நபரான ஏஜென்சிகளிடம் வழங்க முடியாது என்றும், அதில் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்ய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தேர்தலின்போது மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்படாத வகையில் விதிகளின்படி வாக்குச்சாவடிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், சட்ட விதிகளை பின்பற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்தளம் அமைக்க வேண்டும் என்றும், விதிகளின்படி வாக்குச்சாவடிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த முழு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி கடைசி வாரத்திற்கு ஒத்திவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்