தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ரூ.900 கோடி கடன் பாக்கி: வல்லூர் அனல் மின்சார பங்குகளை தேசிய அனல் மின்சார கழகம் வாங்க முடிவு

ரூ.900 கோடி கடன் பாக்கிக்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வல்லூர் அனல் மின்சார பங்குகளை தேசிய அனல் மின்சார கழகம் வாங்க முடிவு செய்துள்ளது.

Update: 2017-02-24 21:45 GMT
சென்னை,

அனல் மின்சார நிலையம்

மத்திய அரசின் தேசிய அனல் மின்சார கழகமும் (என்.டி.பி.சி.) தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து சென்னையை அடுத்த வல்லூரில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒரு அனல் மின்சார நிலையத்தை அமைத்து இருக்கிறது.

இந்த முதலீட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஊரக மின்சார கழகம் மூலம் கடனாக பெறப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ.3 ஆயிரம் கோடியில், தேசிய அனல் மின்சார கழகம் ரூ.1,500 கோடியும், தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1,500 கோடியும் முதலீடு செய்துள்ளது.

தலா 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் 3 யூனிட்டுகளுடன் வல்லூர் மின்சார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 70 சதவீதம் தமிழ்நாட்டுக்கும், மீதம் உள்ள 30 சதவீதம் வெளிமாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது.

ரூ.900 கோடி பாக்கி

இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கிய வகையில் ரூ.900 கோடி பாக்கி தர வேண்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வளவு பெரிய தொகையை தமிழ்நாடு மின்சார வாரியத்தால் உடனடியாக கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தேசிய அனல் மின்சார கழகம் தமிழ்நாடு மின்சார வாரியத்திடம், ரூ.900 கோடிக்கு பதிலாக பங்கை தரும்படியும். முதலீடு செய்த பணத்தை திரும்ப தந்து விடுவதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் ரூ.900 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மின்சார வாரியம் பரிசீலனை

ஏற்கனவே ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அனல் மின்நிலையங்கள் இதுபோல திரும்ப பெறப்பட்டுள்ளது.

ரூ.900 கோடி கடன் பாக்கியை செலுத்துவதா? அல்லது பங்கை கொடுப்பதா? என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்