அ.தி.மு.க.வை வெளியில் இருந்து பாதுகாப்பேன் ம.நடராசன் பேச்சு

நான் எந்த பதவிக்கும் வரமாட்டேன். அ.தி.மு.க.வை வெளியில் இருந்து பாதுகாப்பேன் என்று புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் கூறினார்.

Update: 2017-02-24 22:15 GMT
தஞ்சாவூர்,

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

மருதப்பா அறக்கட்டளை மற்றும் தஞ்சை தமிழ்ச்சங்கம் சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மற்றும் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அங்கு நடந்த ரத்ததான முகாமையும் அவர் தொடங்கி வைத்தார். இதில் மாஸ்கோ தமிழ்ச்சங்க தலைவர் சேகர் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தார். அதைத்தொடர்ந்து விளார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு சேவை அளிக்கும் வகையில் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. இதற்கான சாவியை ம.நடராசன், வக்கீல் தஞ்சை ராமமூர்த்தியிடம் வழங்கினார்.

முன்னதாக விழாவில் புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் பேசியதாவது:-

பிரிந்தவர்கள் மீண்டும் வரவேண்டும்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நாட்டு மக்களுக்காக, தனது உடல்நிலை பற்றி கவலைப்படாமல் வாழ்ந்து இக்கட்டான சூழ்நிலையில் இறந்து விட்டார். அவர் இன்னும் 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்திருக்க வேண்டும். யானை இறந்து விட்டால் ஈ, எறும்புகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதே போல ஜெயலலிதா என்ற ஆலமரம் விழுந்து விட்டது. அவரை பார்க்காதவர்கள், திட்டியவர்கள், உதவாதவர்கள், எட்டி உதைத்தவர்கள், தலைமுடியை பிடித்து இழுத்தவர்கள் இன்று நான், நான் என்று முன்னே வருவதை தமிழகம் பார்த்து வருகிறது.

அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியதைப்போல இந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வர வேண்டும்.

ஜனாதிபதி மறுப்பு

தமிழகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் தி.மு.க.வினர் மனு கொடுக்கிறார்கள். ஆனால் எனக்கு வந்த தகவல், தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முடியாது. மறுதேர்தல் நடத்த முடியாது. அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று ஜனாதிபதி, மு.க.ஸ்டாலினிடம் கூறி திருப்பி அனுப்பிவிட்டார் என்று.

பதவிக்கு வரமாட்டேன்

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தை 29 ஆண்டு காலமாக முன்னெடுத்து சென்றவர் ஜெயலலிதா. அவரது புகழ் இருக்கும் வரை தமிழ்நாட்டில் அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தை யாராலும் ஆட்ட முடியாது. அசைக்க முடியாது. அசைக்கவும் விடமாட்டேன்.

நான் எந்த பதவிக்கும் வரமாட்டேன். வெளியில் தான் இருப்பேன். ஆனால் அ.தி.மு.க.வை பாதுகாக்க செய்ய வேண்டியவற்றை சரியான நேரத்தில் இருந்த இடத்திலேயே இருந்து செய்து காட்டுவேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்