69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்

ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமெங்கும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2017-02-24 23:30 GMT
சென்னை, 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2 திட்டங்கள்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும், வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமையாக்குதல் திட்டத்தையும் தொடங்கி வைக்கும் அடையாளமாக, முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 24-ந் தேதி (நேற்று) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் மகிழம்பூ மரக்கன்றை நட்டு, திட்டங்களை தொடங்கிவைத்தார்.

மாபெரும் திட்டம்

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும், கடந்த 2012-ம் ஆண்டு 64 லட்சம் மரக்கன்றுகளும், 2013-ம் ஆண்டு 65 லட்சம் மரக்கன்றுகளும், 2014-ம் ஆண்டு 66 லட்சம் மரக்கன்றுகளும், 2015-ம் ஆண்டு 67 லட்சம் மரக்கன்றுகளும், 2016-ம் ஆண்டு 68 லட்சம் மரக்கன்றுகளும் நடப்பட்டு இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

69 லட்சம் மரக்கன்றுகள்

இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், இந்த ஆண்டும் அவரது 69-வது பிறந்தநாளையொட்டி மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ் 65 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

இந்த மரக்கன்றுகளை நடும் பணியானது பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். மேலும் இந்த மரக்கன்றுகள் வனப்பகுதிகளிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும் நடப்பட்டு பராமரித்து பாதுகாக்கப்படும்.

இந்ததிட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு பருவநிலை மற்றும் மண்வளத்திற்கு ஏற்ற மரக்கன்றுகளான ஆலம், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற பல்வேறு மரக்கன்றுகள் நடப்படும்.

வார்தா புயல் பாதிப்பு

மேலும் சென்னை மற்றும் அதை அடுத்துள்ள மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் இருந்த பெரும்பாலான மரங்கள் வார்தா புயலால் வேரோடு சாய்க்கப்பட்டும், பாதிப்பிற்கும் உள்ளாகின.

அரசு நிலங்களில் மரங்களை நடுவதற்கும், தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மரம் நடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கும், இந்த மாவட்டங்களிலுள்ள காப்புக்காடுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு மானிய விலையில் 2 லட்சத்து 62 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்பட உள்ளது.

இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக 13 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்