ஜெ.தீபாவின் வீட்டை ஆதரவாளர்கள் முற்றுகை பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலாளரை மாற்றக் கோரி ஜெ.தீபாவின் ஆதரவாளர்கள் அவருடைய வீட்டை முற்றுகையிட்டனர்.

Update: 2017-02-26 22:45 GMT
சென்னை,

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலாளரை மாற்றக் கோரி ஜெ.தீபாவின் ஆதரவாளர்கள் அவருடைய வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது ஒரு பெண் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேரவை நிர்வாகிகள் அறிவிப்பு

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அரசியலில் முழுமையாக ஈடுபடுவதற்காக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை கடந்த 24–ந்தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தொடங்கினார். அதனைதொடர்ந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இந்த பேரவைக்கு பொருளாளராக நான் (ஜெ.தீபா) செயல்படுவேன் என்றார். பேரவை தலைவர் மற்றும் செயலாளர் யார்? என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

அதன்படி நேற்றுமுன்தினம் இரவு, ஜெ.தீபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் மாநில நிர்வாகிகளை அறிவிக்கிறேன். பேரவை தலைவராக ஆர்.சரண்யா, செயலாளராக ஏ.வி.ராஜா ஆகியோரை நியமிக்கிறேன். இவர்களுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள், பேரவை உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். மற்ற நிர்வாக குழு உறுப்பினர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள சரண்யாவும், செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ள ஏ.வி.ராஜாவும் கணவன்–மனைவி ஆவர்.

முற்றுகை; சாலை மறியல்

இந்த தகவல் வெளியான உடன் ஜெ.தீபாவின் ஆதரவாளர்கள் சிலர் நேற்று காலை 9.30 மணி அளவில் சென்னை, தியாகராயநகர் சிவஞானம் சாலையில் உள்ள ஜெ.தீபா வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது, பேரவைக்கு செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.வி.ராஜாவை உடனடியாக மாற்றவேண்டும் என்று கோரி கோ‌ஷங்களை எழுப்பினர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் தியாகராயநகர் உதவி–ஆணையர் ராதாகிருஷ்ணன் போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் அமர்ந்து போராட்டதில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு போராட்டக்காரர்கள் சாலையில் இருந்து எழுந்து சென்றனர்.

அப்போது திருவான்மியூரைச் சேர்ந்த அ.தி.மு.க. பெண் தொண்டர் எஸ்.கலாவதி தனது கைப்பையில் இருந்த பாட்டிலில் எடுத்து வந்த மண்எண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் மண்எண்ணெய் பாட்டிலை பறித்து அவர் தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தினர்.

பேசித் தீர்க்கலாம்

அப்போது வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்த ஜெ.தீபாவின் கணவர் மாதவன் காரில் அங்கு வந்தார். அவரை ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு, ‘‘செயலாளர் ஏ.வி.ராஜா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால் உடனடியாக அவரை மாற்றிவிட்டு நீங்கள் (மாதவன்) செயலாளராக வரவேண்டும் என்பதைத் தான் நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்’’ என்று கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அவர், அனைவரையும் வீட்டுக்குள் அழைத்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஒவ்வொருவரும் அவரவர் கருத்துகளை கூறினர். உடனடியாக, முதலில் அனைவரும் அமைதி காக்க வேண்டும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஜெ.தீபாவிடம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று மாதவன் கூறி அனைவரையும் சமாதானப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து தீபாவின் ஆதரவாளர்கள் அமைதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்