குமரி மாவட்ட கடற்கரை கிராமங்கள் மிகவும் அசுத்தம்..! - அரசின் ஆய்வறிக்கை கூறுவதென்ன..?

மீன்பிடித்தொழில் ஆதிக்கம் செலுத்தும் கிராமங்களில் உள்ள மணல் நிறைந்த கடற்கரைகளில் கவனம் செலுத்தப்பட்டது.;

Update:2025-12-18 07:49 IST

கோப்புபடம்

சென்னை,

தமிழ்நாட்டின் கடற்கரை கழிவுகளின் மதிப்பீடு அளவு, ஆதாரங்கள், மாசுபாடு நிலை தொடர்பான முன்னெடுப்பு அறிக்கையை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கடற்கரை குப்பைகள் குறித்த இந்த ஆய்வுகள் தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் உள்ள 52 கடலோர கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டன. மீன்பிடித்தொழில் ஆதிக்கம் செலுத்தும் கிராமங்களில் உள்ள மணல் நிறைந்த கடற்கரைகளில் கவனம் செலுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் அதன் சதுப்புநிலக் காடுகள் நிறைந்த கடற்கரையோரத்தின் காரணமாக இந்த ஆய்விலிருந்து விலக்கப்பட்டது.

இந்த ஆய்வு பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பிடத்தக்க வகையில், கடற்கரை கிராமப் பகுதிகளில் எதுவும் சுத்தமானதாகவோ அல்லது மிகவும் சுத்தமானதாகவோ இல்லை என்ற விவரம் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை ஆகிய 6 கடற்கரை கிராமங்கள் மிகவும் அசுத்தமாகவும், திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், செங்கல்பட்டு ஆகிய கடற்கரை கிராமங்கள் அசுத்தாமகவும், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை கடற்கரை கிராமங்கள் ஓரளவுக்கு சுத்தமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை கிராமங்களைப் பொறுத்தவரையில், கானத்தூர், நீலாங்கரை, கொட்டிவாக்கம், திருமுடிவாக்கம் மிகவும் அசுத்தமாகவும், பனையூர், பட்டினப்பாக்கம், எண்ணூர் சின்னக்குப்பம் கடற்கரை கிராமப் பகுதிகள் அசுத்தமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கடற்கரை கிராமங்களில் பிளாஸ்டிக் மிக அதிகளவில் இருப்பது புதுக்கோட்டை கடற்கரைப் பகுதிகளாக இருக்கின்றன. அதற்கடுத்தபடியாக விழுப்புரம், ராமநாதபுரம், சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி இருக்கின்றன. அடுத்ததாக அதிகளவில் பிளாஸ்டிக் தஞ்சாவூர், நாகப்பட்டினம், செங்கல்பட்டு, திருவள்ளூர் கடற்கரைப் பகுதிகளிலும், கொஞ்சமாக பிளாஸ்டிக் இருக்கும் இடங்களாக மயிலாடுதுறை, கடலூர் கடற்கரைப் பகுதிகளும் வருகின்றன.

அரசின் இந்த ஆய்வறிக்கையில் கடல் மற்றும் கடற்கரை குப்பைகளைக் கட்டுப்படுத்தவும், அதனை கையாளவும் கொள்கை நடவடிக்கைகளை கையில் எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்