ஆம்னி பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: உணவு வினியோக ஊழியர் கைது
பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது 40 வயது நபர் ஒருவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.;
கோப்புப்படம்
கோவையை சேர்ந்த 23 வயது இளம்பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
அந்த பேருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பேருந்தில் பயணம் செய்த காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது கவுஸ் (40 வயது) என்பவர் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதை தட்டி கேட்ட இளம்பெண்ணிடம் அவர் தகராறு செய்தார். இது தொடர்பாக, அந்த இளம்பெண் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி முகமது கவுசை கைது செய்தனர். கைதான முகமது கவுஸ் பெங்களூருவில் உள்ள உணவு வினியோக நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இது தொடர்பாக, சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.