திருப்பூர்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த 38 கிலோ கஞ்சா பறிமுதல் - 9 பேர் கைது

கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 2 பைக்குகள், செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2025-12-18 07:20 IST

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவினாசி எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த காரில் 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டிவந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அவினாசியை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (வயது 23) என்பது தெரியவந்தது.

ஒடிசாவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து, வேட்டுவபாளையத்தில் உள்ள சங்கர் என்பவரது வாடகை வீட்டில் பதுக்கி வைத்து, நண்பர்கள் மூலம் விற்பனை செய்து வருவதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

அதன்பேரில் சங்கரின் வீட்டுக்கு விரைந்து சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 38 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அந்த வீட்டில் 8 வாலிபர்கள் இருந்தனர். அவர்களும், நவநீத கிருஷணனும் சேர்ந்து ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து நவநீத கிருஷ்ணன் மற்றும் அந்த வீட்டில் இருந்த அதேப்பகுதியை சேர்ந்த கார்த்திக் (27), தினோத் (28), கவுசிக் (28), வெங்கடேஷ் (26), சங்கர் (26), திருப்பூரைச் சேர்ந்த பாலாஜி (25), பிரவீன் (26) மற்றும் சேயூர் கவுதம் (21) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடா்ந்து கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 2 பைக்குகள், செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான கவுதமை தவிர மற்றவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்