இன்று தொடங்குகிறது பிளஸ்–2 தேர்வு: ஒழுங்கீன செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை

பிளஸ்–2 தேர்வு இன்று தொடங்குகிறது. இதையொட்டி தேர்வுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஒழுங்கீன செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடப்பட்டது.

Update: 2017-03-02 02:57 GMT
சென்னை, 


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரத்து 606 பேர் எழுதுகிறார்கள். இந்த வருடமும் மாணவிகள் தான் அதிகம் தேர்வு எழுத உள்ளனர்.

மாணவர்–மாணவிகள் எழுதக்கூடிய விடைத்தாள் ஏற்கனவே தேர்வுத்துறையால் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டது. அதன் முகப்பு சீட்டில் மாணவர்களுக்கு உரிய பதிவு எண் எழுதப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் பதிவு எண்ணை எழுத வேண்டியது இல்லை.


தேர்வுக்குரிய வினாத்தாள்கள் பாட வாரியாக ஏற்கனவே அனுப்பப்பட்டு வினாத்தாள் காப்பு மையங்களில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருக்கிறது. தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளும் தேர்வுப்பணியை பார்வையிட உள்ளனர்.

தேர்வில் குளறுபடிகள் எதுவும் நடக்காமல் இருக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இயக்குனர், இணை இயக்குனர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுத சரியான முறையில் இருக்கைகள் போடப்பட்டு உள்ளனவா?, அதில் மாணவர்களின் பதிவு எண் எழுதப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்தனர். மேலும் மாணவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? என உறுதி செய்தனர். இது தவிர வினாத்தாள் வைக்கப்பட்டு உள்ள மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என்றும், அவ்வாறு ஈடுபட்டால் அவர்களுக்கு உரிய தண்டனை குறித்தும் எச்சரிக்கை நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் ஒட்டப்பட்டன.

மேலும் செய்திகள்